இலங்கையில் அண்மைக்காலமாக பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களை பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.
குறிப்பாக பாதாள உலகக் குழு செயற்பாடுகளுடன் தொடர்புடைய பிரபல குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வெளிநாடுகளில் பதுங்கி இருந்து இலங்கையில் திட்டமிட்ட அடிப்படையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கொலைகள், கொள்ளைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அண்மையில் இந்தோனேசியாவில் கெஹெல்பத்ர பத்மே, கமாண்டோ சலிந்து உள்ளிட்ட ஐந்து முக்கிய பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையின் காவல்துறை வரலாற்றில் முதல் தடவையாக பெரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒரு கும்பல் வெளிநாடு ஒன்றில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் பெருமையுடன் தெரிவித்திருந்தது.
இந்த குற்றவாளிகள் அரசு அதிகாரிகள், போலீஸ் திணைக்களத்தைச் சேர்ந்த சிலர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் தொடர்புகளை பேணி வந்துள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசியல்வாதிகளுடனும் இந்த குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் இலங்கையை ஆட்சி செய்த பல்வேறு அரசாங்கங்கள் பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டவில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குற்றம் சுமத்தி இருந்தது.
தேர்தல் பிரச்சார மேடைகளில் கூட இது தொடர்பிலான குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி குற்றம் சுமத்தி இருந்தது.
இந்த நிலையில் தற்போது ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைமையில் இந்த கைதுகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் ஓமானில் பதுங்கி இருந்த பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான மெதிகம சூட்டி என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க என்பவர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இலங்கையின் மேல் மற்றும் தென் மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு போதைப்பொருள் கடத்தல் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுடன் இந்த நபர்கள் தொடர்பு பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு எனினும் தற்போதைய அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டுடன் இந்த பாதாள உலகம் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றது என்பதில் எவ்வித மாற்றக் கருத்தும் கிடையாது.
இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்க்கட்சிகள் மலினப்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல அரசியல்வாதிகள் பாதாள உலகக்குழு தலைவர்களுடன் நேரடி தொடர்புகளை பேணி வருவதனால் அவர்களின் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு போதைப்பொருள் கடத்தல், விநியோகம் உள்ளிட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு கொண்டு ஈட்டிய பெருந்தொகை பணத்தை இந்த குற்றவாளிகள் பல்வேறு கணக்குகளில் வாய்ப்பு செய்துள்ளதாகவும் பெருமளவில் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
சினிமா பாணியில் இந்த நபர்கள் பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டுள்ளனர், கெஹல்பத்தர பத்மே என்ற நபர் இலங்கையில் போதைப் பொருள் உற்பத்தி நிலையமொன்றை உருவாக்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமான செயல்பாடுகள் மூலம் திரட்டப்பட்ட நிதி பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு தலைவர்களுடன் நட்புறவு பேணிய அரசியல்வாதிகள் தற்பொழுது பீதியடைந்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் தற்போதைய அரசாங்கம் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற என்ற நிலைப்பாட்டை கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவிற்கும் இந்த குற்றச் குழுக்களுக்கும் தொடர்ப உண்டு என சில தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தாம் எந்தவொரு குற்றக் கும்பலுடனும் தொடர்பு பேணவில்லை எனவும் எந்தவொரு விசாரணையையும் எதிா்கொள்ளத் தயார் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

