மித மிஞ்சிய அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இளம் ஆண்களின் இதயம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கலோரிகள் எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இதயத்திற்கு ஆபத்தினை ஏற்படுத்தும் என புதிய ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு கடந்த மாத இறுதியில் செல் மெட்டாபொலிசம் Cell Metabolism என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது.
20 முதல் 35 வயதுடைய 43 ஆண்களின் உணவுப் பழக்கங்களையும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய விளைவுகளையும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆராய்ந்தது.
அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்றால் என்ன?
இவை உற்பத்தி செய்யும் போதே மிகுந்த அளவில் மாற்றம் செய்யப்பட்ட, பிரித்தெடுக்கப்பட்ட அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் உணவகளாகும். பெரும்பாலும் பொதியிடப்பட்டு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.
இதில் உறையவைக்கப்பட்ட பீட்சா, சிப்ஸ், பாக்கேஜ் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ், சர்க்கரை நிறைந்த சீரியல் உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவை அடங்கும்.
ஆய்வின் நடைமுறை
ஆண்கள் குழுவை இரண்டு விதமாகப் பிரித்து, மூன்று வாரங்களுக்கு பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மூன்று வாரங்களுக்கு இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்ளச் செய்தனர். இடையில் மூன்று மாத இடைவெளியும் வைக்கப்பட்டது.
ஒவ்வொரு குழுவிலும், வயதிற்கும் உடல் இயக்கத்திற்கும் ஏற்ப சாதாரண கலோரி அளவு கொடுக்கப்பட்டோர், மேலும் அதிகப்படியான கலோரி பெற்றோர் என இருபிரிவாக சோதனை செய்யப்பட்டது.
அதிர்ச்சி அளித்த முடிவுகள்
- இரு விதமான உணவுகளிலும் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் அளவு சமமாக இருந்தாலும், முடிவுகள் வேறுபட்டிருந்தன.
- கலோரி சமமாக இருந்தபோதிலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்கள் அதிக எடை பெற்றனர்.
- அவர்களின் கொலஸ்ட்ரால் அளவுகளும் மோசமடைந்தன.
- இனப்பெருக்க ஆரோக்கியத்தில், விந்து தரமும் இயக்கமும் குறைந்ததோடு, டெஸ்டோஸ்டெரோன் போன்ற ஹார்மோன்களும் குறைந்தன.
“மிகவும் அதிர்ச்சியளித்த விஷயம், கலோரி அளவு ஒரே மாதிரி இருந்தும், எடையில் ஒரு கிலோக்கும் அதிக வித்தியாசம் ஏற்பட்டது” என ஆய்வின் முதன்மை எழுத்தாளர் ஜெசிக்கா பிரெஸ்டன்,கூறியுள்ளார்.
காரணம் என்ன?
உணவு செரிமான அமைப்புடன் தொடர்பு கொள்ளும் விதம் வித்தியாசமாக இருப்பதால், ஒரே அளவு கலோரி இருந்தாலும், நார்ச்சத்து, சத்துக்கள், மாற்றுச் சத்து (metabolism) செயல்முறை போன்றவை உடல் எவ்வாறு அதை சேமிக்கிறது, பயன்படுத்துகிறது என்பதைக் கட்டுப்படுத்துகின்றன.
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தவை
- பதப்படுத்தப்படாத உணவைத் திடீரென எடுத்தபோதும், உடலில் சிறிய அளவு அணைத்தழல் (inflammation) அதிகரித்தது. இது உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் ஏற்பட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.
- குறுகிய காலத்திற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தாலும், அது இதய நலம், மாற்றுச் சத்து செயல்பாடு, இனப்பெருக்க திறன் ஆகியவற்றுக்கு நன்மை தரும் என ஆய்வு கூறுகிறது.
ஆண்களின் இனப்பெருக்க நலம்
பிரெஸ்டன், இந்த ஆய்வு தந்தையாவதற்கு விரும்பும் ஆண்கள் உணவு தேர்வுகளை செய்ய உதவும் எனக் கூறினார்.
“ஆண்கள் கவலைப்படமாட்டார்கள், உணவுப் பழக்கத்தை மாற்றமாட்டார்கள் என்ற பழைய கருத்தை மாற்ற வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்வு செய்தால், அது அவர்களின் இனப்பெருக்க திறனை மேம்படுத்தும்” என்றார்.
இந்த ஆய்வு, ஒரு உணவு அதிகமாக பதப்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை உணவுத் தேர்வில் கவனிக்க வேண்டிய முக்கிய காரணி என வலியுறுத்துகிறது.
“சாத்தியமெனில், குறைவாக செயலாக்கப்பட்ட உணவுகளைத் தேர்வு செய்வது எப்போதும் சிறந்தது,” என ஆய்வு கூறுகிறது.

