நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்குஎ திரான போராட்டத்தின் போது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காட்மாண்டுவில் நேற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஊழல் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்த, குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
நியூ பானேஷ்வோர் பகுதிக்கு அருகில் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, காட்மாண்டு மாவட்ட நிர்வாகம் பிற்பகல் 12.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகை (ஷிதல் நிவாஸ்), துணைத் தலைவர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஊரடங்கு விரிவாக்கப்பட்டது.
ஹாமி நேபால் எனும் இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம் ஜென் இசட் போராட்டம் “Gen Z Protest” என அழைக்கப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். இளைஞர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாமல் நேரடியாக ஊழலை எதிர்த்து குரல் கொடுத்ததாக சாட்சிகள் கூறுகின்றனர்.
2017 ஆம் ஆண்டு நேபாள ஏர்லைன்ஸ் மேற்கொண்ட ஏர்பஸ் A330 விமான கொள்முதல் ஒப்பந்தம் ஊழலால் 1.47 பில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக வெளிப்பட, மக்கள் கோபம் அதிகரித்தது.
அரசாங்கம் கடந்த வாரம் பேஸ்புக் Facebook, இன்ஸ்டாகிராம் Instagram, யூடியுப் YouTube,வாட்ஸ்அப் WhatsApp உட்பட 26 சமூக வலைத்தளங்களை பதிவு செய்யாததால் தடை செய்தது.
வெளிநாடுகளில் வேலை செய்யும் நேபாளர்கள் அதிகமாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால், திடீர் தடை மக்களின் அதிருப்தியை மேலும் தூண்டியது.
போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை, நீர்த்துப்பாக்கி, பின்னர் ரப்பர் குண்டுகள், கடைசியாக துப்பாக்கிச் சூடு பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 பேர் உயிரிழந்தனர் – உடலுக்கு துப்பாக்கிக் காயங்களால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக Kathmandu Post செய்தி வெளியிட்டது.
பன்னிரெண்டுக்கும் மேற்பட்டோர் தலையிலும் மார்பிலும் துப்பாக்கிக் காயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளனர்.

