நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் காட்மாண்டுவின் டல்லு பகுதியில் உள்ள அவரது இல்லத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்து தீ வைத்ததில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டது.
காயமடைந்த சித்ராகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். இதே நேரத்தில், பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் வீடும் தீக்கிரையானது.
இதன் பின்பு, பரவலாகக் கிளர்ந்தெழுந்த போராட்டங்களின் காரணமாக ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக, சமூக ஊடகங்களைத் தடை செய்த அரசின் முடிவுக்கு எதிராக இளைஞர்கள் முன்னிலை வகித்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறி, காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்திருந்தனர்.
பின்னர் தடை நீக்கப்பட்டாலும், போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து, பாராளுமன்றக் கட்டடம் உட்பட பல்வேறு அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
காட்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டு, இராணுவ ஹெலிகாப்டர்கள் அமைச்சர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றன.
நிதி அமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேல் போராட்டக்காரர்களால் தெருக்களில் விரட்டப்பட்டு, தாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டன.
“ஜெனரேஷன் Z போராட்டம்” என அழைக்கப்படும் இக்கிளர்ச்சி, பேஸ்புக், எக்ஸ், யூடியூப் போன்ற தளங்களை அரசு முடக்கியதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.
தடை நீக்கப்பட்ட பின்னரும், காவல்துறை வன்முறையில் உயிரிழந்தோரின் நீதிக்கான கோரிக்கைகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்த கோபம் போராட்டத்தைத் தொடரச் செய்தது.

