இஸ்ரேல் இராணுவம், கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் உயர்மட்ட தலைவர்களை குறிவைத்து வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதலில் குறிவைக்கப்பட்ட ஹமாஸ் தலைவர்கள் பல ஆண்டுகளாக அந்த அமைப்பின் நடவடிக்கைகளை வழிநடத்தி வந்ததாகவும், “ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை தோற்கடிக்கும் வரை நடவடிக்கைகள் தொடரும்” எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல், சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் இராணுவத் தலைவர் எயால் ஸமீர் வெளிநாட்டில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்களை படுகொலை செய்வதாக மிரட்டியதையும், சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியுறவுத் தலைவர் கிடியன் சார் அமெரிக்கா முன்வைத்த காசா சமாதான முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அறிவித்ததையும் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது.
கத்தாரின் தலைநகர் டோஹாவில் ஹமாஸ் பிரதிநிதிகள் அமெரிக்காவின் புதிய முன்மொழிவை விவாதித்து வந்த வேளையில் இந்தத் தாக்குதல் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேள, காசா நகரை கைப்பற்றும் திட்டத்தை முன்னெடுத்து வரும் இஸ்ரேல், பொதுமக்களை வெளியேறுமாறு எச்சரித்து தெற்கிற்கு இடம்பெயர உத்தரவிடுவதாகவும் காணப்படுகிறது. பலரின் பார்வையில், சமாதான முயற்சிகளை தடுக்கும் நோக்கத்திலேயே இஸ்ரேல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கத்தாரில் ஹமாஸ் அரசியல் புலனாய்வு அலுவலக உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்புகளை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் மிகக் கொடிய குற்றமாகும்.
இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களையும் விதிமுறைகளையும் வெளிப்படையாக மீறியதோடு, கத்தார் குடிமக்கள் மற்றும் அங்கு வசிப்போரின் உயிர் பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலாகும்” என கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை கத்தார் தீவிரமாகக் கண்டிக்கிறது. பிராந்திய பாதுகாப்பை சீர்குலைக்கும், கத்தாரின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை நேரடியாக குறிவைக்கும் இஸ்ரேலின் அசட்டையான நடத்தையை இனி பொறுத்துக் கொள்ளாது என மேலும் தெரிவித்துள்ளது.

