கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை வெளியேறுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஸ்ட பேச்சாளர் ஓருவரை மேற்கோள்காட்டி தெற்கு ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட மூலம் இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தீா்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த நாளயை தினம் பிற்பகல் 4.00 மணியளவில் தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்திற்கு திரும்ப உள்ளதாகவும் அவரை வரவேற்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் விசேட ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

