யேமனின் தலைநகர் சனாவில் இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி இயக்கம் தெரிவித்துள்ளது.
அந்த இயக்கத்துடன் தொடர்புடைய அல் மசீரா தொலைக்காட்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
யேமன் சுகாதார அமைச்சகத்தின் பேச்சாளர் அனீஸ் அல்-அஸ்பாஹி மற்றும் ஹூதி இராணுவ பேச்சாளர் யஹ்யா சரீ ஆகியோர் தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், இஸ்ரேல் இதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.
இந்த தாக்குதல் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள மறைவிடத்தில் நடத்தப்பட்டதாகவும், அது ஹூதி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு தலைமையகமாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை, சனாவில் உள்ள அல்-சித்தீன் தெருவில் உள்ள ஒரு மருத்துவ நிலையமே இஸ்ரேல் விமானங்கள் இலக்காகக் கொண்டதாக யேமன் எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் அறிவித்துள்ளது.
காசா, லெபனான், சிரியா ஆகிய இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் தினசரி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
கத்தாரின் தோஹா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

