அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய அரசியல் சகாவும், இளம் கன்சர்வேட்டிவ் செயற்பாட்டாளருமான சார்லி கெர்க் (31), யூட்டாவில் நடைபெற்ற பல்கலைக்கழக நிகழ்வில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்.
மிகச் சிறந்த, வரலாற்று சிறப்பு மிக்க சார்லி கெர்க் இனி எங்களுடன் இல்லை. இளைஞர்களின் இதயத்தை அவர் போல யாரும் புரிந்துகொள்ளவில்லை. அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டார்” என டிரம்ப் தனது சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது திட்டமிட்ட அரசியல் படுகொலையாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவில் ஞாயிறு வரை தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க உத்தரவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
யூட்டா வாலி பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கெர்க் தனது கழுத்தைப் பிடித்துக் கொண்டு தரையில் விழும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
இது அரசியல் படுகொலை என யூட்டா மாநில ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் கண்டித்துள்ளார்.
இது எங்கள் மாநிலத்திற்கும், தேசத்திற்கும் இருண்ட நாள் என அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமா உள்ளிட்ட ஜனநாயக தலைவர்கள் வன்முறையை கண்டித்துள்ளனர்.
எங்கள் நாட்டில் இத்தகைய வன்முறைக்கு இடமில்லை. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என பைடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொலை, கடந்த வருடம் நடந்த டிரம்ப் மீது நடந்த கொலை முயற்சி உள்ளிட்ட அரசியல் வன்முறைகளின் தொடர்ச்சியாக அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெர்க் மரணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவர் “அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை” குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

