பிலிப்பைன்ஸ் தென்கிழக்குக் கடற்கரை அருகே 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் உயிருக்கு ஆபத்தான சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என எச்சரித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் மிண்டனாவ் தீவின் கிழக்குப் பகுதியில், தலைநகர் தவாவோவிலிருந்து சுமார் 123 கிலோமீட்டர் தொலைவில், 58.1 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது. உடனடி சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் (Phivolcs) இதனை 7.6 ரிக்டர் அளவிலானதாகக் குறிப்பிட்டு, “உயிருக்கு ஆபத்தான உயரமான சுனாமி அலைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளது.
கடலோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு, பிலிப்பைன்ஸ் சில பகுதிகளில் 1 முதல் 3 மீட்டர் உயரம் வரை அலைகள் உருவாகக்கூடும் என்றும், இந்தோனேசியா மற்றும் பலாவ் தீவுகளின் சில கடலோரப் பகுதிகளில் 30 செ.மீ. முதல் 1 மீட்டர் உயரம் வரை அலைகள் உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளது.
உலகின் பாதிக்கு மேற்பட்ட எரிமலைகள் அமைந்துள்ள “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள 40,000 கிலோமீட்டர் நீளமான நில அதிர்ச்சி வளைவில் பிலிப்பைன்ஸ் அமைந்துள்ளது. இதனால் அந்நாடு அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது.

