பாலஸ்தீன அதிகாரப் பிரதேசத்தின் பிரதமர் முகமது முஸ்தபா, மத்திய கிழக்கு அமைதி செயல்முறைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதி கிரிஸ்டோப் பிகோட்டை (Christophe Bigot) ரமல்லாவில் சந்தித்துள்ளார்.
இருவரும் காசா பகுதியில் போர்நிறுத்தத்திற்குப் பிந்தைய அடுத்த கட்டத்திற்கான தயாரிப்புகளில் கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில், திட்டமிடல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஸ்டீபன் சலமே (Stephan Salameh) கலந்து கொண்டார்.
கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள் காசா மறுசீரமைப்பு, மேலும் மேற்கு கரை மற்றும் காசா பகுதிகளில் பாலஸ்தீன நிறுவனங்களை ஒன்றிணைத்து, பாலஸ்தீன் அரசை நடைமுறையில் நிறுவும் முயற்சி என்பனவாகும்.
முகமது முஸ்தபா, இஸ்ரேல் தற்போது பிடித்துவைத்து வரும் பாலஸ்தீன நிதிகளை விடுவிக்கவும், மேலும் மேற்கு கரையில் நடைபெறும் தாக்குதல்களை நிறுத்தவும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பிகோட் ஐரோப்பிய ஒன்றியம் காசா பகுதியில் நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், ரஃபா எல்லைப் புள்ளியில் ஐ.ஒ. எல்லை உதவி மிஷனை மீண்டும் ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

