இலங்கையின் மிகப் பழமையான விமான நிலையமான ரத்மலான விமான நிலையம் விரைவில் ஒரு புதிய யுகத்தை நோக்கி பயணிக்க உள்ளது.
நாட்டின் வான்வழி மேலாண்மையை முழுமையாக மாற்றும் வகையில் நவீன “Airfield Facility Complex” ஒன்றை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் ஒப்புதலுடன் 3.04 பில்லியன் ரூபா மதிப்பிலான இத்திட்டம் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காலனித்துவ காலத்திலிருந்து இயங்கிவரும் பழைய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கட்டடம் இத்திட்டத்தின் மூலம் மாற்றப்படும்.
புதிய “Air Navigation Complex” மூலம், நவீன தன்னியக்க முறைமைகள், மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள், மேலும் பல கட்டுப்பாட்டு நிலையங்கள் என முன்னேற்றமான Air Traffic Management (ATM) தொழில்நுட்பம் அறிமுகமாகும்.
இது முடிவடைந்ததும், இலங்கைக்கு பிராந்திய மற்றும் பன்னாட்டு விமானங்களை அதிக துல்லியத்துடன் மற்றும் பாதுகாப்புடன் கையாளும் திறன் கிடைக்கும்.
திட்டத்தின் சிறப்பம்சமாக, 360-பாகை பார்வையுடன் கூடிய பலத்தள கட்டுப்பாட்டு கோபுரம் (Control Tower) அமைக்கப்பட உள்ளது.
இது ரத்மலானுக்கு முதல்முறையாகும். தற்போதைய கோபுரத்தின் வரையறுக்கப்பட்ட பார்வை பரப்பளவு நீண்டகாலமாக பாதுகாப்பு சிக்கலாகக் கருதப்பட்டு வந்தது. புதிய கோபுரம் அந்த சிக்கலை நீக்கி, தரை மற்றும் வான்வழி நடவடிக்கைகளை வேகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வழிவகுக்கும்.
அதிகாரிகள் தெரிவிப்பதாவது, இத்திட்டம் இலங்கையின் மேல் வான்வழி பரப்பை – நாட்டின் நிலப்பரப்பை விட 27 மடங்கு பெரிதான பகுதியை – சிறப்பாகக் கட்டுப்படுத்தும் திறனை வழங்கும். இதன் மூலம் தினசரி 300-க்கும் மேற்பட்ட விமானச் சலனங்களை மேலாண்மை செய்வது சாத்தியமாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

