காசா போர் முடிந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் காசாவில் உள்ள சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கும் நடவடிக்கைக்காக இஸ்ரேலுக்குப் பயணிக்கும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தம் நிலைத்திருக்கும் என்றும், காசாவிற்காக “அமைதி குழு (Board of Peace)” விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காசா தற்போது “சிதிலமடைந்த இடம்” போல் தோன்றுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பென்யமின் நெத்தன்யாகு மற்றும் மத்தியஸ்த நாடாக செயல்பட்ட கட்டார் ஆகியவற்றின் பங்களிப்பையும் பாராட்டினார்.
ஹமாஸ் இன்னும் கையில் வைத்திருக்கும் அனைத்து பணயக் கைதிகளையும் இன்று மதியம் (இஸ்ரேல் நேரம் 12:00)க்குள் விடுவிக்க வேண்டும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பின்னர், டிரம்ப் எகிப்து சென்று போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் நடைபெறும் சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த மோதல், 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் தெற்கு இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் உயிரிழந்து, 251 பேர் கடத்தப்பட்டதன் பின்னர் தொடங்கியது.
அதற்கு பதிலாக இஸ்ரேல் நடத்திய இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 67,000-க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள், அதில் 18,000 குழந்தைகளும், உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர்நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை காலை நடைமுறைக்கு வந்தது. இது டிரம்ப் வடிவமைத்த 20 அம்ச அமைதி திட்டத்தின் முதல் கட்டம், மேலும் அடுத்த கட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
இஸ்ரேல் சிறைபிடித்துள்ள 250 பலஸ்தீன கைதிகள் மற்றும் 1,700 காசா கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, காசாவிற்கு கூடுதல் மனிதாபிமான உதவிகள் அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்களை முடித்து சமாதானத்தை ஏற்படுத்துவதில் தாம் நிபுணத்துவம் கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

