பதப்படுத்தப்பட்ட தாவர உணவுகளின் ஊடாக மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அதிக அளவில் அல்ட்ரா–ப்ராசஸ்ட் அல்லது மித மிஞ்சிய அளவில் பதப்படுத்தப்பட்ட தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வோர் இதய நோய்களுக்கு அதிக அபாயத்தை எதிர்கொள்கிறார்கள் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
பொதுவாக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகப் பாராட்டப்படும் வீகன் உணவுமுறை, அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சார்ந்தால் அதன் நன்மைகள் மறைந்துவிடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வு The Lancet இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த 63,800-க்கும் மேற்பட்ட நடுத்தர வயதுடையவர்களிடம் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட நபர்களை தொடர்ந்து கண்காணித்ததில், முழுமையான, குறைந்த செயலாக்கம் கொண்ட தாவர உணவுகள் அடிப்படையாக இருந்தால்தான் இதயம் பாதுகாக்கப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
விலங்கு உணவுகளை குறைப்பது மட்டும் போதாது; குறைந்தளவு பதப்படுத்தப்பட்ட தாவர உணவுகளை அதிகரிப்பதே இதய ஆரோக்கியத்திற்கு அவசியம்” என ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளருமான கிளெமென்டின் பிரியூ தெரிவித்துள்ளார்.
சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான கண்காணிப்பில், முழுமையான மற்றும் குறைந்த செயலாக்கம் கொண்ட தாவர உணவுமுறையை பின்பற்றியவர்கள், இதய நோய் ஏற்படும் அபாயத்தில் 44 சதவீதம் குறைவாக இருந்தனர்.
அதற்கு மாறாக, அல்ட்ரா–ப்ராசஸ்ட் தாவர உணவுகள் அதிகம் கொண்ட உணவுமுறையை பின்பற்றியவர்களுக்கு இதய நோய் அபாயம் 46 சதவீதம் உயர்ந்ததுடன், மொத்த இதய–இரத்தக் குழாய் நோய்களின் அபாயமும் 38 சதவீதம் அதிகரித்தது.
“உணவின் தாவர–விலங்கு சமநிலை மட்டுமல்ல, அதன் ஊட்டச்சத்து தரமும், பதப்படுத்தல் அளவும் இதய நோய் தடுப்பில் முக்கியமானவை என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

