இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார வளர்ச்சி விகிதங்கள், அடுத்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு சந்தையில் நுழையவுள்ள சுமார் 10 இலட்சம் பேருக்கு போதுமான வேலைகளை உருவாக்காது என உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் முன்னணி பொருளாதார நிபுணரான அர்விந்த் நாயர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அடுத்த ஒரு தசாப்தத்தில் சுமார் 10 இலட்சம் இலங்கையர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் நுழைவார்கள். ஆனால் தற்போதைய வளர்ச்சி நிலை தொடருமானால், உருவாகும் புதிய வேலைகள் தேவைப்படும் அளவை விட மிகவும் குறைவாக இருக்கும் என என சுட்டிக்காட்டியுள்ளார்.
வளர்ச்சி மந்தமாக தொடர்ந்தால், ஒரு உண்மையான வேலைவாய்ப்பு இடைவெளியை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் தனியார் துறை முதலீடு செய்து வேலைகளை உருவாக்குவது அவசியம், என அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 3 முதல் 4 சதவீதம் வரை இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக நலனும் ஒரு முக்கிய சவாலாக உள்ளதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு வறுமை விகிதம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதை மாற்ற பொருளாதார வளர்ச்சி அடிப்படைத் தேவை. நிதி நிலை மட்டும் அல்ல; வேலைவாய்ப்பும் மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடும் வளர்ச்சியையே சார்ந்தவையே என அவர் தெரிவித்துள்ளார்.

