ஒருவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதென்பது பல்வேறு முக்கிய காரணிகளுடன் தொடர்புபட்டிருக்கின்றது. அந்த வகையில் நீண்ட ஆயுளுக்கு ஒருவர் என்ன உண்கிறார் என்பது மட்டுமன்றி, என்ன உணவுகளை தவிர்க்கிறார் என்பதும் முக்கியமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகில் அதிக ஆயுட்காலம் மற்றும் குறைந்த நீண்டகால நோய் பாதிப்புகள் காணப்படும் “ப்ளூ ஸோன்ஸ்” (Blue Zones) எனப்படும் பகுதிகளை ஆய்வு செய்ததில், நீண்ட நாட்கள் வாழ்பவர்கள் சில குறிப்பிட்ட உணவுகளை பெரும்பாலும் தவிர்ப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Real Simple என்ற வாழ்க்கைமுறை இதழ் வெளியிட்ட தகவலின்படி, 100 வயதுக்கும் மேற்பட்ட சிரேஸ்ட பிரஜைகள் அடங்கிய உணவுப் பழக்கங்களை ஆய்வு செய்ததில், நவீன உணவுமுறையுடன் தொடர்புடைய பல நீண்டகால நோய்களை குறைக்க சில உணவுகளை அவர்கள் கட்டுப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஒகினாவா, இத்தாலியின் சார்டீனியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ப்ளூ ஸோன்ஸ் பகுதிகளை ஆய்வு செய்த டேன் பியுட்னர், நீண்ட ஆயுளுக்கு உணவுத் தவிர்ப்பும் முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நாட்கள் வாழ்பவர்களின் உணவில் அரிதாக காணப்படும் 6 உணவுகள் வருமாறு:
- சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் (Refined grains)
மேலை நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வெள்ளை ரொட்டி, பாஸ்தா, செயற்கை காலை உணவுத் தானியங்கள் போன்றவை நீண்ட ஆயுளுடையவர்களின் உணவில் இல்லை. இவற்றில் நார், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள் குறைவாக இருப்பதுடன், இரத்த சர்க்கரை அளவிலும் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும். - சிவப்பு இறைச்சி (Red meat)
மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவை ப்ளூ ஸோன்ஸ் பகுதிகளில் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவு சிவப்பு இறைச்சி உட்கொள்வது குடல் புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. - பொதியிடப்பட்ட உணவுகள் (Packaged foods)
செயற்கை சேர்க்கைகள், உணவை பதப்படுத்தம் பொருட்கள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட தயார்செய்யப்பட்ட உணவுகள் நீண்ட ஆயுள் பெற்றவர்களின் வீடுகளில் அரிதாகவே காணப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டு வெளியான ஆய்வு, இவ்வகை உணவுகள் நினைவாற்றல் குறைவு மற்றும் மனநோய் அபாயத்தை அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. - மாட்டுப்பால் (Cow’s milk)
கால்சியம் மற்றும் புரதம் இருந்தாலும், மாட்டுப்பாலை நீண்ட ஆயுளுடையவர்கள் குறைந்த அளவிலேயே பயன்படுத்துகின்றனர். சிலர் தாவர அடிப்படையிலான பால் அல்லது ஆடு, செம்மறி பால் போன்றவற்றை விரும்புகின்றனர். அதிக செறிவூட்டப்பட்ட கொழுப்பு இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. - சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் இனிப்புகள்
குளிர்பானங்கள், சக்தி பானங்கள், பொட்டலப்பட்ட பழச்சாறுகள் போன்றவை பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன. இனிப்புகள் விசேட நாட்களுக்கு மட்டுமே. அதிக சர்க்கரை உட்கொள்வது நீரிழிவு,உடல் எடை, கல்லீரல் நோய் மற்றும் நினைவாற்றல் குறைவு போன்றவற்றுடன் தொடர்புடையது. - பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (Processed meats)
சொசேஜ், பேக்கன், ஹாட் டாக் போன்ற பதப்படுத்தப்படட் இறைச்சிகள் நீண்ட ஆயுள் உணவுமுறையில் மிகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு (WHO) இவ்வகை இறைச்சிகளை புற்றுநோய் உண்டாக்கும் உணவுகளாக வகைப்படுத்தியது.
இதற்கு மேலாக, நீண்ட நாட்கள் வாழ்பவர்கள் “80/20” விதியை பின்பற்றுகின்றனர். அதாவது, வயிறு 80 சதவீதம் நிரம்பியவுடன் உண்பதை நிறுத்துவது. இதனுடன், சீரான உடற்பயிற்சி, சமூக உறவுகள் மற்றும் வாழ்க்கை நோக்கம் ஆகியவை நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்விற்கு முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
இந்த உணவுகளை தவிர்ப்பது எமது ஆயுளை நீடிப்பதற்கான வழிகளில் ஒன்றாக அமையும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

