அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான ஈரான் தூதர் குற்றம் சாட்டியுள்ளார்.
போராட்டங்களை தொடரவும் “உங்கள் அரசியல் நிறுவனங்களை கைப்பற்றவும்” என டிரம்ப் ட்ருத் சோஷியல் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
டிரம்பின் இந்த கருத்துக்கு ஈரான் கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.
ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து வன்முறையை தூண்டுவதாகக் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை மீது ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐ.நா.வில் ஈரானின் நிரந்தர பிரதிநிதியான அமீர் சயீத் இரவானி, ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அபுகார் தாஹிர் ஒஸ்மானுக்கு இந்த விவகாரம் தொடர்பில் கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த இரண்டு நாடுகளையும் கண்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்பின் இந்த பொறுப்பற்ற கூற்று அரசியல் நிலைகுலைவைக் கொடிய முறையில் ஊக்குவிக்கிறது. வன்முறையைத் தூண்டும் மற்றும் அழைக்கும் வகையில் உள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.
இது ஈரான் இஸ்லாமிய குடியரசின் இறையாண்மை, பௌதீக ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும்” என இரவானி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வன்முறைக்கு தூண்டுதல், பலம் பயன்படுத்தும் மிரட்டல்கள் மற்றும் ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா மேற்கொள்ளும் தலையீடுகளை ஐ.நா. உறுப்பு நாடுகளும் பாதுகாப்பு கவுன்சிலும் கடுமையாக கண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாக நிலை குலைக்கும் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.

