ஈரானில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பலர் உயிரிழந்துள்ள பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இராணுவ தலையீட்டுக்கான எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை (UNSC) அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தியது.
15 உறுப்பினர்களைக் கொண்ட சக்திவாய்ந்த இந்த ஐ.நா. அமைப்பின் கூட்டத்தில், ஈரானின் துணை ஐ.நா. பிரதிநிதி உரையாற்றினார்.
ஈரான் மோதலை நாடவில்லை எனக் கூறிய அவர், அமெரிக்க தாக்குதல் ஏற்பட்டால் அதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
மேலும், ஈரானில் உருவாகியுள்ள அமைதியற்ற நிலையைத் தூண்டுவதில் வாஷிங்டன் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
அமெரிக்க தரப்பில் பேசிய பிரதிநிதி மைக் வால்ட்ஸ், போராட்டங்களை ஒடுக்கிய ஈரான் அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.
ஈரானில் விதிக்கப்பட்டுள்ள இணைய முடக்கம் காரணமாக அரசின் அடக்குமுறையின் உண்மை அளவை சரிபார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“இஸ்லாமிய குடியரசின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஈரான் மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக குரல் எழுப்பி வருகின்றனர்,” என வால்ட்ஸ் தெரிவித்தார்.
போராட்டங்களை வெளிநாட்டு சதி என ஈரான் அரசு கூறுவது, அந்த அரசு தங்களது சொந்த மக்களையே அஞ்சுகிறது என்பதற்கான சான்று என்றும் அவர் கூறினார்.
எனினும், அண்மைய நாட்களில் டிரம்ப் விடுத்த இராணுவ தலையீட்டு எச்சரிக்கைகள் குறித்து அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.
இதற்கிடையில், ஈரானின் துணை ஐ.நா. தூதர் கோலம் ஹொசைன் தர்சி, “ஈரான் பதற்றத்தையோ மோதலையோ விரும்பவில்லை” என்று மீண்டும் வலியுறுத்தினார்.
“ஆனால், நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு தாக்குதலும் நிகழ்ந்தால், ஐ.நா. சாசனத்தின் 51-வது பிரகடனத்தின் அடிப்படையில் சட்டபூர்வமான, அளவான பதில் வழங்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
“இது மிரட்டல் அல்ல; சட்ட ரீதியான உண்மை நிலை,” என்றும் அவர் கூறினார்.
ஐ.நா. துணை பொதுச் செயலாளர் மார்தா பொபி, பாதுகாப்பு கவுன்சிலுக்கு விளக்கமளிக்கையில், மக்கள் போராட்டங்கள் கடந்த மூன்று வாரங்களில் நாடு முழுவதும் பரவிய கலவரமாக மாறி, கணிசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

