இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் நேற்று காணாமல் போன சிறிய டர்போப்ராப் விமானத்தின் பாகனங்களை மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
எனினும், அந்த விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசியன் ஏர் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், யோக்யகார்டா நகரிலிருந்து தெற்கு சுலாவெசி மாகாணத்தின் தலைநகரான மகாசார் நோக்கி பறந்துகொண்டிருந்த போது, சனிக்கிழமை பிற்பகல் சுமார் 1 மணியளவில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது.
இதையடுத்து, பெரும் அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
விமானத்தின் உடல் பகுதி, வால் பகுதி மற்றும் ஜன்னல்கள் உள்ளிட்ட பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தரை மற்றும் வான்வழி குழுக்கள் தொடர்ந்து பயணிகள் மற்றும் பணியாளர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எங்களின் முதன்மை இலக்கு பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதே. பாதுகாப்பான நிலையில் யாரையாவது மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், இந்த விமானம் மகாசார் நகரை ஒட்டியுள்ள பந்திமுருங்–புலுசாரவுங் தேசிய பூங்காவின் மலைப்பகுதியான புலுசாரவுங் மலையில் மோதி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடினமான நில அமைப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் சவாலாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த தேடுதல் நடவடிக்கையில் விமானப்படை, காவல்துறை, தேடுதல்–மீட்பு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் தரைப் படைகள் மரோஸ் மாவட்டம் முழுவதும், விமானம் கடைசியாக தொடர்பில் இருந்த பகுதிகளில் பரவலாக தேடுதல் நடத்தி வருகின்றன.
விமான உற்பத்தியாளர் ஏடிஆர் (ATR), தங்களது விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது குறித்து தகவல் பெற்றுள்ளதாகவும், விசாரணை மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கி வருவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியாவில், தொலைதூர பகுதிகளை இணைக்க விமான போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
இருப்பினும், கடந்த ஆண்டுகளில் பல விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்து, விமான பாதுகாப்பு குறித்த கவலைகளை ஏற்படுத்தி வந்துள்ளன.

