மிகவும் சக்திவாய்ந்த சூரிய புயல் காரணமாக சுவிட்சர்லாந்தில் துருவ ஒளி (Aurora Borealis) தென்பட்டதாக சுவிஸ் வானிலை சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது கடந்த 20 ஆண்டுகளில் பதிவான மிக வலுவான புவிக் காந்த புயலாகும் என கூறப்படுகிறது.
இந்த இயற்கை அதிசயக் காட்சி சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் காணப்பட்டது. குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் அரிதாகவே காணப்படும் பச்சை நிற துருவ ஒளியும் இந்த முறை பதிவாகியுள்ளது.
மூடுபனி இல்லாத பகுதிகளிலும், அதிக உயரமான மலைப்பகுதிகளிலும் துருவ ஒளி தெளிவாகக் காணப்பட்டது. ஆனால் மத்திய சமவெளிப் பகுதிகளில் 700 முதல் 800 மீட்டர் உயரம் வரை பரவியிருந்த அடர்ந்த மூடுபனி காரணமாக, இந்த காட்சியை பார்க்க முடியவில்லை.
இந்த புவிக் காந்த புயல் ஐந்து நிலை அளவுகோலில் நான்காம் நிலையை எட்டியுள்ளதாகவும், இது மின்சார விநியோக வலையமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள்களில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அமெரிக்க விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் (SWPC) சார்ந்த ஷான் டால் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஐந்தாம் நிலை சூரிய புயல் ஏற்பட்டிருந்தாலும், தற்போதைய புயல் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக வலுவான சூரிய புயல் என அவர் விளக்கினார்.
2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ‘ஹாலோவீன்’ சூரிய புயல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் பரவலான மின்தடைகள் மற்றும் சக்திவள கட்டமைப்பு சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்த முறை ஏற்பட்ட சூரிய புயல் ஒரு மிக சக்திவாய்ந்த சூரிய வெடிப்பால் உருவானதாகவும், அதில் இருந்து வெளியான துகள்கள் பூமியின் காந்தப் புலத்தை பாதிப்பதன் காரணமாக துருவ ஒளி தோன்றியதோடு, வானொலி தொடர்பு தடங்கல்கள், செயற்கைக்கோள் கோளாறுகள் மற்றும் மின்வலையமைப்புகளில் அதிக சுமை போன்ற பிரச்சினைகளும் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

