கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகளில் சுமார் 60 வீதமானவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சாரதிகள் கடுமையான போதைப்பொருள் அடிமைகளாக உள்ளனர் என போக்குவரத்து, அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு போக்குவரத்து, அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் 2,700 சாலை விபத்துகள் பதிவாகி அதே எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில் சுமார் 2,000 பேர் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மற்றும் பின்புறம் பயணித்தவர்கள் எனவும், பாதிக்கப்பட்டவர்களில் 53% ஆண்கள் எனவும் தெரிவிதுள்ளார்.
இந்த விபத்துகளில் சுமார் அரைவாசிக்கு சாரதிகளே பொறுப்பு என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த சாரதிகளில் பெரும்பாலோர் மதுபானம் அல்லது சட்டவிரோத போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பேருந்து சங்கங்கள் வெளியிட்ட தகவலின்படி, தங்களது சாரதிகளில் சுமார் 60% போதைப்பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஸ்டியன் மாவத்தை பகுதியில் செயல்பட்ட நடமாடும் பரிசோதனை அலகுகள் 53 சாரதிகளை பரிசோதித்ததில், 10 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டது. ஆயினும், பரிசோதனையின் மறுநாளில் பல சாரதிகள் பணிக்கு வராததால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற விரும்பும் சாரதிகளுக்கு மறுவாழ்வு வசதிகள் வழங்கப்படும் எனவும், மற்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்ம் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உரிய பயிற்சி பெற்று சிறப்பு அனுமதி பெறாமல் இனி எந்த சாரதிக்கும் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படமாட்டாது அமைச்சர் பிமல் ரட்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

