இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் மீது பதவி விலகும் அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது.
எப்ஸ்டீன் சர்ச்சையின் பின்னணியில் அவர் பதவி விலக வேண்டும் என ஸ்கொட்லாந்து லேபர் கட்சித் தலைவர் அனஸ் சர்வார் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கவனச்சிதறல் நிறுத்தப்பட வேண்டும். டவுனிங் ஸ்ட்ரீட்டில் தலைமை மாற்றம் அவசியம், என சர்வார் தெரிவித்தார்.
ஸ்டார்மரின் தகவல் தொடர்பு தலைமை அதிகாரி டிம் அலன், பதவி விலகினார்.
இதற்கு ஒரு நாள் முன்பு பிரதமரின் தலைமை அலுவலர் மோர்கன் மெக்ஸ்வீனி ராஜினாமா செய்திருந்தார்.
அமெரிக்காவில் சிறார் பாலியல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட பின்னர் சிறையில் தற்கொலை செய்துகொண்ட நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புகள் இருந்ததாக அறியப்பட்ட பீட்டர் மண்டல்சனை அமெரிக்காவுக்கான தூதராக நியமித்தது ஸ்டார்மருக்கு எதிரான விமர்சனத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
அரசியல் நல்லதற்கான சக்தியாக இருக்க முடியும் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும். நாட்டை மாற்றும் பணியை நம்பிக்கையுடன் தொடர்வோம் என பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு பதவி விலகும் திட்டம் எதுவும் இல்லை. நாடு முழுவதும் மாற்றத்தை கொண்டு வர அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என அவரது தெரிவித்துள்ளார்.
பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்தாலும், அமைச்சரவை உறுப்பினர்களில் சிலர் ஸ்டார்மருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனை மாற்றும் எங்கள் நோக்கத்தில் எந்த விஷயமும் கவனச்சிதறலாக இருக்கக் கூடாது. அந்த பணியில் பிரதமருக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது என துணைப் பிரதமரும் நீதி செயலாளருமான டேவிட் லாமி குறிப்பிட்டுள்ளார்.
கியர் பிரதமராக இருப்பதால் நாம் நாட்டை சரியான பாதைக்கு திருப்பி வருகிறோம் என நிதி அமைச்சரான ரேச்சல் ரீவ்ஸ், சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
முன்னாள் துணைத் தலைவரும் எதிர்கால தலைமைப் போட்டியாளராக பார்க்கப்படும் அஞ்சலா ரெய்னரும், “பிரதமருக்கு எனது முழு ஆதரவு உள்ளது. எங்கள் மதிப்புகளை நினைவில் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் கேமி பேட்னொக், ஸ்டார்மர் அரசை திறம்பட நடத்த முடியாமல் உள்ளார் என குற்றஞ்சாட்டினார்.
“காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் பையைப் போல அவர் இருக்கிறார். கட்டுப்பாட்டை பிடிக்க முடியாவிட்டால், லேபர் கட்சியில் வேறு யாராவது பொறுப்பேற்க வேண்டும் அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

