லெபனானின் வடக்கு நகரமான திரிபோலியில் அடுத்தடுத்து அமைந்திருந்த இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிவில் பாதுகாப்புத் துறை பொது இயக்குநர் இமாத் க்ரெய்ஷ், ஞாயிற்றுக்கிழமை இரவு லெபனான் ஊடகங்களுக்கு வழங்கிய தகவலில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும், மீட்கப்பட்ட ஆறு பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இடிந்து விழுந்த கட்டிடம் இரண்டு பிரிவுகளைக் கொண்டதாகவும், ஒவ்வொரு பிரிவிலும் ஆறு குடியிருப்புகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டிடம் இடிந்தபோது சுமார் 22 பேர் உள்ளேயிருந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் மதிப்பிட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிவில் பாதுகாப்பு அணிகள், லெபனான் செம்பிறை சங்கம் மற்றும் அவசர நிவாரண அமைப்புகளின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
அப்பகுதி மக்கள் கூட தன்னார்வமாக இடிபாடுகளை அகற்றி உயிர் பிழைத்தவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
திரிபோலி நகர மேயர் அப்துல் ஹமீத் கரிமே, பாதுகாப்பற்ற கட்டிடங்களின் நிலைமையால் “திரிபோலி நகரை பேரிடர் பாதித்த நகரமாக அறிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். “பல ஆண்டுகளாக ஏற்பட்ட புறக்கணிப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர். நிலைமை நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மீறியுள்ளது” என்றும் அவர் கூறினார்.
இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அண்மையில் உள்ள குடியிருப்புகள் மேலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக கருதி, உள்துறை பாதுகாப்பு படையினர் மற்றும் நகராட்சி பொலிஸார் அப்பகுதி மக்களை வெளியேற்றியுள்ளதாக அரசின் தேசிய செய்தி நிறுவனம் (NNA) தெரிவித்துள்ளது.
லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆஉன், மீட்பு பணிகளுக்கு அனைத்து அவசர சேவைகளும் முழு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், அண்டை கட்டிடங்களில் வசித்தவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

