பொது துறையில் ஊழலை எதிர்க்கும் நடவடிக்கைகளில் சுவிட்சர்லாந்து பின்னடைவை சந்தித்துள்ளதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய தரவரிசையில், சுவிட்சர்லாந்து ஒரு இடம் சரிந்து 6வது இடத்துக்கு தாழ்ந்துள்ளது.
ஊழல் தொடர்பான சுட்டெண் அறிக்கையின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்து 100 மதிப்பெண்களில் 80 புள்ளிகளை பெற்றுள்ளது.
இது கடந்த ஆண்டை விட ஒரு புள்ளி குறைவாகும். இதனால், ஊழலில் ஈடுபடுவதற்கான மனப்பாங்கு அதிகரித்திருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது என அமைப்பின் சுவிஸ் கிளை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஊழலை எதிர்க்கும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என ட்ரான்பெரன்ஸி இன்டனர்நெசனல் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.
அரசு அதிகாரிகள் தனியார் துறைக்கு மாறும் நடைமுறைகளில் தெளிவான விதிகள் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கான்டன் மற்றும் நகராட்சி மட்டங்களில் ஊழல் எதிர்ப்பு திட்டங்கள் பெரும்பாலும் இல்லாத நிலை உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த பின்னடைவு ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல; கடந்த 10 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து மொத்தமாக 6 புள்ளிகளை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் தரவரிசையில் சுவிட்சர்லாந்து, ஸ்வீடன் நாட்டுடன் இணைந்து 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.
டென்மார்க், ஃபின்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் அதிக மதிப்பெண்களை பெற்று முன்னிலையில் உள்ளன.
இந்த அறிக்கை, சுவிட்சர்லாந்து தனது ஊழல் எதிர்ப்பு சட்டங்கள் மற்றும் நிர்வாக முறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துகிறது.

